எபிரேய மொழி

உலக வரலாற்றில் வழக்கொழிந்த ஒரு மொழி, இன்றைய நவீன உலகத்தில்,  ஒரு நாட்டின் பேச்சு மொழியாக உயிர்ப்பிக்கப்பட்டது என்றால் அது Hebrew / எபிரேயம் மட்டுமே. Biblical Hebrew / வேதாகம எபிரேயம், பேச்சு மொழியாக உருபெற்றது வரலாற்றில் ஒரு மாபெரும் தனித்தன்மை வாய்ந்த நிகழ்வு.

எலியேசெரின் வட ஆப்ரிக்கா வாசம் அவருக்கு காச நோயில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை தந்தாலும் அவர் நினைத்தார் தாம் அந்நோயால் மரித்தால் தம் தாய் மண்ணிலேயே மரிக்க வேண்டும். ஆதலால் அவர் எருஷலாயீம் நகரத்திற்கே மீண்டும் திரும்ப எண்ணம் கொண்டார். இது அன்றைய காலகட்டத்தில் மிகச் சிரமமான முடிவாகும். ஏனென்றால் அன்றைய பாலஸ்தீனம் ஒரு செழிப்பும் இல்லாத தரிசுநிலம். மேலும் எருஷலாயீம் நகரம் நோய்கள் உருவாகும் குப்பை தொட்டிலாக இருந்தது. நகரின் சாலைகள் நடுவே சாக்கடை ஓடியது.

ஒரு வசதியும் இல்லாத நகரமாக இருந்ததால் எலியேசர், சாலமன் ஜோனசுக்கு கடிதம் எழுதுகிறார், தாம் டெபோராவை மணக்க முடியாதென்று. அவர் ஏன் இவ்வாறு எழுதினார் என்றால் தனக்கு மணமகளாக வரும் பெண் அந்நகரத்தில் வாழ்வது கடினமாக இருக்கும், நோய்வாய்ப்பட நேரிடும் மேலும் தானும் சீக்கிரத்தில் மரணத்தை தழுவ நேரிடும் போன்ற காரணங்களுக்காக. ஆனாலும் டெபோரா பல வருடங்களாக இருவரும் சந்திக்காத நிலைமையிலும் எப்படி நம்முடைய வேதத்தில் ரூத் தன் மாமியார் நெவோமிக்கு தன்னை அர்பணித்தாளோ அது போல் தன்னை ஒப்புவிப்பதாகக் கூறி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி பதில் கடிதம் எழுதி அனுப்பினாள்.

1881இல் Cairo கைரோவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எலியேசெரின் வயது 23 டெபோராவின் வயது 27. தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் தன் பெயரை எபிரேய மொழி உச்சரிப்பில் உள்ளது போலவே மாற்றிக்கொண்டார். தெபொராளில் இருந்து דְּבוֹרָה டெபோரா என்னும் மூல மொழி உச்சரிப்புக்கு. மேலும் அவர்களது ஒப்பந்தப்படியே இல்லத்தில் எபிரேய மொழியே பேச வேண்டும் என்று சம்மதித்து இருந்தனர். இத்துனைக்கும் டெபோராவிற்கு சிறிதளவே எபிரேய மொழி தெரியும். அன்றாடம் பேச உரையாட மொழியில் வார்த்தைகள் கிடையாது. ஆதலால் அவர்கள் சில ஆண்டுகள் சைகையால், சுட்டிக் காட்டுதல் கொண்டு தகவல் பரிமாறிக் கொண்டனர்.

அவ்வருடத்தின் குளிர் காலத்தில் அவர்கள் Jaffa יָפָו யஃப்பா துறைமுகத்திற்கு வந்தனர். அங்கிருந்து குதிரை வண்டி மூலம் எருஷலாயீம் நகரத்திற்கு பயணித்தனர். அங்கு அவர்கள் 41 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின் நாட்களில் எலியேசர் தன் நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தான் தன் வாழ்க்கையில் இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே வருந்துவதாகவும். அதற்கான ஆறுதலும் இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். ஒன்று தான் எருஷலாயீம் நகரத்தில், ஏன் இஸ்ரயேல் நாட்டில் கூட பிறக்கவில்லை மற்றொன்று தான் பேசிய முதல் மொழி எபிரேயம் இல்லையே என்று.

ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த யூதர்கள் தங்களின் ஜெபங்களின் முடிவில் “அடுத்த ஆண்டு எருஷலாயீமில்” என்று முடிப்பர். ஒருவாறாக அந்த ஜெபம் எலியேசெர், டெபோரா அவர்களது வாழ்க்கையில் நிறைவேறினாலும் அவர்கள் கண்ட எருஷலாயீம் வேதத்தில் ஏசாயா (62:3) தீர்க்கதரிசி

     “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.”

சொன்னது போல் இல்லாதிருந்தது. அந்நகரத்தில் குப்பைகளின் மத்தியில் சுமார் 25000 மக்கள் குடியேறி இருந்ததைக் கண்டனர். அவர்களில் ஐம்பது சதவீதம் யூத மக்கள். மேலும் அவர்கள் அனைவரும் லடினோ, இட்டிஷ், அரபிக், ஸ்பானிஷ் மற்றும் ரஷ்ய மொழி பேசியது மேலும் ஏமாற்றமாக அமைந்தது. யாரும் எபிரேய மொழி பேசவில்லை.

முதலில் அவர்கள் ஆச்சாரமான செபார்டிக் யூதர்களோடு நட்பு பாராட்ட அவர்களைப் போலவே உடையணிதல் Kosher כָּשֵׁר கோஷெர் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடித்து Shabbat שַׁבָּת ஷப்பாத் அன்று ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ளுதல் போன்றவற்றை செய்தனர். ஆனால் இம்முயற்சி ஒரு பயனும் அளிக்கவில்லை.

யூத தாயக இயக்கத்தைச் சேர்ந்தவராக, எபிரேயத்தை பேச்சு மொழியாக்க துடிப்பவர் என்கின்ற அவரைப் பற்றிய முன் தீர்மானம், ஏற்கனவே அங்கு இருந்த யூதர்கள் கொண்டிருந்ததனால், குறிப்பாக அஷ்கெனாஸி யூதர்கள், இவர்களை ஒதுக்கி வைத்தனர்.

ஆதலால் பென் எஹுடா மற்றும் அவரது மனைவி ஐரோப்பியர்கள் போல் உடையணிய வேண்டும் என்று எண்ணினர். அவ்வாறே எலியேசெர் தன் காதோர முடியினை கத்தரித்து, தாடியை நவ நாகரீக பாணியில் வடிவமைத்து, நீளமான அங்கியைத் துறந்து கோட் சூட் உடைக்கு மாறினார். இந்த மாற்றத்தைக் கண்ட ஆச்சாரமான யூதர்கள், இந்த இரு தம்பதிகள் கண்டிப்பாக புறச்சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தாங்கள் நினைத்தது சரி தான் என்கிற முடிவுக்கு வந்தனர்.

பென் எஹுடாவின் ஆர்வம் ஒருமுகப்படத் தொடங்கி Mishnah மிஷ்னாவில் உள்ள புகழ் பெற்ற Rabbi Tarfon ரபி டர்போனின் வசனமான (“The day is short; the work to be done is so great!”) நாட்களோ குறைவு, வேலையோ அதிகம் ! என்பதை பெரிய சித்திரமாக வரைந்து தான் நின்று வேலை செய்யும் மேஜைக்கு மேல் உள்ள சுவரில் மாட்டி வைத்தார். அவர் நின்று கொண்டு பணி புரிவதையே விரும்பினார். அவ்வாறே ஒரு நாளைக்கு 15-19 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்யத் தொடங்கினார்.