எபிரேய மொழி

உலக வரலாற்றில் வழக்கொழிந்த ஒரு மொழி, இன்றைய நவீன உலகத்தில்,  ஒரு நாட்டின் பேச்சு மொழியாக உயிர்ப்பிக்கப்பட்டது என்றால் அது Hebrew / எபிரேயம் மட்டுமே. Biblical Hebrew / வேதாகம எபிரேயம், பேச்சு மொழியாக உருபெற்றது வரலாற்றில் ஒரு மாபெரும் தனித்தன்மை வாய்ந்த நிகழ்வு.

பென் எஹுடாவின் முயற்சிகளுக்கு அவர் தம் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆச்சாரமான யூதர்கள் தம் இனத்தின் புனித மொழியானது பொது மொழியாகிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர்.

ஒரு சமயம் அவர்கள் பென் எஹுடா பத்திரிக்கையில் எழுதியதை வேண்டுமென்றே தவறாக மொழி பெயர்த்து ஓட்டோமான் அரசிடம் சென்று தேச துரோக குற்றச்சாட்டு பதிவு செய்தனர். இதன் விளைவாக பென் எஹுடா கைதாகி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வெளியே வந்தார். அவர் மேல் முறையீட்டு செய்யும் வரை அவர் கொடுத்த விலை என்னவெனில் அவர் இனி பத்திரிக்கை எதுவும் பிரசுரிக்கக் கூடாது என்பதே.

இந்தப் பிரச்சினையில் இருந்து பென் எஹுடா மீண்டு வர முக்கிய காரணமானவர் பரோன் எட்மன்ட் ரோத்சைல்ட் / Baron Edmond de Rothschild (1845-1934), இவர் ஒரு பிரெஞ்சு தேசத்து கொடையாளர், யூத தாயக இயக்க (Zionism) ஆதரவாளர். வழக்கு விவகாரத்தால் பென் எஹுடாவை அஷ்கெனாஸி யூத தலைவர்கள் தம் மதத்தை விட்டு விலக்கி வைத்தனர் .

அது போல் மத சார்பற்ற யூதர்கள் எபிரேய மொழி மீது ஆர்வம் காட்டாமல் இருந்ததே பெரும் எதிர்ப்பாக இருந்தது. அவர்கள் தீவிரமாக பென் எஹுடாவின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் 1890கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் யூத தாயக இயக்கத்தைச் சேர்ந்த யூதர்கள் பெரும்பாலோனோர் மனிதநேய ஆர்வலர்கள், சமதர்மவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், அறியவியலாமைக் கொள்கை உடையவர்களாக இருந்தனர். இவர்கள் யாவரும் வேத கால எபிரேய மொழி தம் இல்லத்தின் பேச்சு மொழியாக உருவாக வேண்டும் என்கிற ஆர்வம் துளி கூட இல்லாதவர்களாக இருந்தனர்.

இதற்கு யூத தாயக இயக்கத் தந்தை என்று அறியப்படும் தியோடோர் ஹெர்ஸல் / Theodor Herzl (1860-1904) மிகச் சிறந்த உதாரணமானவர். இவர் ஒரு முற்றிலும் மதச்சார்பற்ற யூதர். எபிரேய மொழி பொது மொழியாவது இயலாத ஒன்று என்று கருதினார் அதனால் இவர் ஜெர்மன் மொழியை விரும்பினார். சில யூதர்கள் இட்டிஷ் மொழியை விரும்பினர்.

பென் எஹுடா, தியோடோர் ஹெர்ஸல் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார் . அவரைச் சந்திக்க பல முறை முயன்று இறுதியாக 1898 அவரைச் சந்தித்து தன் எண்ணங்களை தெரிவித்த போது, ஹெர்ஸல் அவற்றின் மீது ஆர்வம் காட்டாமல் இருந்தார். அன்றைய தினம் ஹெர்ஸல் தன் நாட்குறிப்பில் இவ்வாறு எழுதுகிறார். “எபிரேய மொழியை தேசிய மொழியாக பின் பற்ற வேண்டும் – இது நம் இயக்கத்தின் அத்தியாவசிய தேவை என்று என்னை சமாதானப்படுத்த ஒரு இளம் வெறியன் இன்று முயற்சித்தான். ஆனால் அது நிச்சயமாக கேலிக்குரியது !”

வாழ்க்கை முழுவதும் மன அழுத்தம், சிரமம், கடுமையான சூழல், கொடிய நோயின் தாக்கம் மற்றும் நிறைவேற்றவே இயலாத எபிரேய மொழி பணிக்கான தொடர் போராட்டம் போன்ற சமயங்களில் பென் எஹுடாவை தொடர்ந்து ஆதரவளித்து, ஊக்கப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள் அவரது இரு மனைவியர்.

முதலாமவர் டெபோரா, இவர் மூலம் பென் எஹுடா ஐந்து குழந்தைகளின் தகப்பனானார். உணவு தயாரிக்க பொருள் இல்லாத போதும் அண்டை வீட்டார் அவமதிப்பு செய்யும் போதும் நிந்தனைகளை அமைதியுடன் மிகப் பொறுமையோடு சகித்துக்கொண்டார். பென் எஹுடா இவரை “இரண்டாயிரம் ஆண்டுகளில் முதல் எபிரேயத் தாய்” என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் இவரே எபிரேயத்தை தம் தாய் மொழியாகப் பேசி வளரும் குழந்தைகளை பெற்று எடுத்ததினால். 1891 டெபோரா தம் 37வது வயதில் தம் கணவரிடம் இருந்து தொற்றிய காச நோயின் காரணமாய் திடீரென மரித்தார். பென் எஹுடா ஒரு வாரம் கழித்து தன் பத்திரிகையில் டெபோராவிற்கு புகழாரம் சூட்டும் வண்ணம் எரேமியா 2:2 – “விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன்” என்கிற வேத வசனத்துடன் மிக எளிமையாக எழுதினார்.

இரண்டு மாதங்கள் சென்ற பிறகு பென் எஹுடாவின் துன்பங்கள் மேலும் அதிகமாயின. அச்சமயம் பரவிய கடுமையான காய்ச்சல் தொற்றுநோயால் அவரது இளம் குழந்தைகள் மூவர் அடுத்தடுத்து பலியாயினர். அப்போது அவருக்கு 33 வயது இந்த நிலைமையில் அவருக்கு ஆறுதலும், உதவியும் தேவைப்பட்டது.

மீண்டும் உதவியானது சாலமன் ஜோனஸ்சின் குடும்பம் மூலம் வந்தது. தான் இறப்பதற்கு முன்பே டெபோரா தன் தங்கை Paula / பௌலாவிற்கு, தன் மறைவிற்கு பின் தன் இடத்தை அவள் நிரப்ப வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். தம் மற்றொரு மகளையும் சாவிற்கு இழக்க நேரிடும் என்பதால் சாலமன் ஜோனஸ்சின் குடும்பம் இந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர் . ஆனால் பௌலாவை தடுக்க முடியவில்லை. அவரும் தம் அக்காவைப் போல் பென் எஹுடாவின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர் பென் எஹுடா செய்து வரும் மிக முக்கியமான பணிக்கு உதவி செய்வது தன் விதி என நம்பினார். அச்சமயம் அவரது வயது 19.

பௌலா, பென் எஹுடாவிற்கு அவரை திருமணம் செய்ய விருப்பம் என்றும் தன் அக்காவைப்போல் தானும் பெயரை எபிரேய மொழியில் மாற்றிக்கொள்ள விரும்புவதால் சில பெயர்களை அனுப்ப கோரிக்கை வைத்து கடிதம் எழுதி அனுப்புகிறார். பென் எஹுடா அனுப்பிய பட்டியலில் இருந்து Hemda / ஹெம்டா என்ற பெயரை தேர்ந்தெடுத்தார் . இப் பெயர் – அன்புக்குரியவர், நேசத்துக்குரியவர் என்று பொருள்படும்.

ஹெம்டாவும் தம் அக்காவைப்போல விசுவாசமுள்ள, சமயோசித புத்தியுள்ள, ஆதரவளிக்கும், உதவிகரமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவர் பென் எஹுடாவுடன் வாழ்ந்த முப்பது ஆண்டுகளில் ஆறு மக்கட் செல்வங்களைப் பெற்றெடுத்தார். அவர் யுரோப் முழுவதும் பயணம் புரிந்து பென் எஹுடாவின் ஆராய்ச்சிகள் மற்றும் எழுத்துகளுக்கு நிதிஉதவி திரட்டினார். அவரே பென் எஹுடாவின் அகராதிக்கு பிரசித்தி பெற்ற ஜெர்மானிய வெளியீட்டாளர் ஒருவரை கண்டு பிடித்தார் .