இஸ்ரயேல் 70 

இஸ்ரயேல் என்னும் நாடு மீண்டும் நிறுவப்பட்டது, 1878 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்தப் பதிவில் பரிசுத்த வேதாகமத்தில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் ஒன்று நிறைவேறிய வரலாற்று தருணங்களில் கர்த்தரின் கரம் செயல்பட்ட விதங்களைக் காண்போம்.

நம்மில் பலர் இருபதாம் நூற்றாண்டில் சம்பவித்த மிக முக்கிய வரலாற்று நிகழ்வு எது என்று ஒரு கேள்வி கேட்டால் கீழ் கண்டவற்றுள் ஏதாவது ஒன்றைக் குறிப்பிடுவர்.

 • 1903 ரைட் சகோதரர்கள் முதல் விமானம் பறக்க விட்டது
 • 1914 -1918 முதல் உலகப் போர்
 • 1928 பெனிசில்லின் ஆண்ட்டிபயாடிக் கண்டுபிடிப்பு
 • 1940 முதல் கணினி உருவாக்கம்
 • 1939 -1945 இரண்டாம் உலகப் போர்
 • 1945 முதல் அணு குண்டு பரிசோதனை
 • 1950 தொலைக்காட்சி ஒளிப்பரப்பு ஆரம்பம்
 • 1957 முதல் விண்வெளி கலம் விண்ணில் ஏவப்பட்டது
 • 1961 முதல் மனிதன் விண்வெளி பயணம்
 • 1969 மனிதன் நிலவில் கால் பதித்தது
 • 1991 சோவியத் ரஷ்ய நாடு உடைந்தது
 • 1993 ஐரோப்பா யூனியன் உருவாக்கம்
 • 1995 இன்டர்நெட் சேவை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி ஈடு இணையற்ற நம் பரிசுத்த வேதாகமத்தில் உரைக்கப்பட்ட அதிசயம்! அடையாளம்! ஒன்று நிறைவேறியது! அது எது? கி.பி. 70க்குப் பின் யூதர்கள் உலகம் பூராவும் சிதறடிக்கப்பட்டனர். (உபாகமம் 28:58,64) சொல்லொண்ணா துன்பத்தை சந்தித்தார்கள். சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள் 14 மே1948 அன்று இஸ்ரயேல் என்னும் நாடு மீண்டும் நிறுவப்பட்டது, 1878 ஆண்டுகளுக்குப் பிறகு!

இந்த சிறப்பு வாய்ந்த உன்னத நிகழ்வினை, பல்வேறு கூறுகளாக தம்மை மாற்றிக்கொண்ட திருச்சபை கவனிக்கத்  தவறி மேலும், மேலும் யூத இன எதிர்ப்பு வாதங்களையும், தத்துவங்களையும், கோட்பாடுகளையும் தாங்கிப்பிடித்து தன் பயணத்தைத் தொடர்ந்தது.  

ஆனால் வேதத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை கவனமாக ஆராய்ந்து படித்து கர்த்தரின் வார்த்தைக்கு கீழ் படிந்தவர்களாய், காரியங்களை பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்த அரசியல் அதிகார வல்லமை பெற்ற சில நல்ல தலைவர்கள் வரலாற்றில் இருந்து இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்!

சரி வேதத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் எசக்கியேல் 37:1-14 உள்ளது – “காய்ந்த எலும்புகளின் தரிசனம்” இந்தப் பகுதியில் கர்த்தர் எசக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகளால் நிரம்பிய ஒரு பள்ளத்தாக்கில்  நிறுத்தி, அங்கு இருந்த இறந்து போனவர்களின் காய்ந்து போன எலும்புகளிடம் தீர்க்கதரிசனம் உரைக்கச் சொல்கிறார்.

இந்த உரையாடலை வேதத்தில் வாசிக்கையில், நாம் கண்களை மூடி நம்மை நாமே கற்பனையில் அந்தப் பள்ளத்தாக்கில் நிறுத்திக் கொண்டு, கர்த்தர் பேச பேச எசக்கியேல் தீர்க்கதரிசி மறு மொழிய நடைபெறும் அதிசயத்தை மனதில் காண முயல வேண்டும். நம் கண் முன் இன்றுள்ள ஒரு நவீன 3D அனிமேஷன் திரைப்படம் அரங்கேறும்.  

உலர்ந்த எலும்புகளை தசை நார்கள், தசை பிறகு தோலால் கர்த்தர் மூடி அவைகளுக்கு உயிர் மூச்சும் கொடுத்து பெரிய சேனையாய் எழுப்பி இவ்வெலும்புகள் இஸ்ரயேல் வம்சத்தார் ஆவர் என்கிறார். அவர்களை “இஸ்ரயேல் நிலத்திற்கு” கொண்டு வருவேன் என்றும் நான் உங்களில் என் ஆவியை வைப்பேன், உங்களது சொந்த நாட்டிற்கு வழி நடத்திச் செல்வேன், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்றும் வாக்கு உரைக்கிறார்.

உலர்ந்த எலும்புகளாக, நம்பிக்கையற்றவர்களாக  பல நாடுகளில்(கல்லறை) தஞ்சம் அடைந்தவர்களுக்கு உயிர் கொடுத்து சொந்த நாடும் கொடுக்கையில் கர்த்தர் அந்நாட்டை கானான் என்றோ பாலஸ்தீன் என்றோ அழைக்காமல் இஸ்ரயேல் என்றே அழைத்தார். אדמת ישראל / Admat Yisrael / அட்மட் இஸ்ரயேல் என்று எபிரேயத்தில் சொல்லப்படுகிறது.

அதுவே நம் வாழ்நாளில், நம் கண் முன், நிறைவேறி, உலக நாடுகளில் முன்னணி நாடாகத் திகழ்வதை காண்கையில் நாம் வணங்கும் இறைவனின் மாட்சிமையை என்னவென்பது.

மேலும் வாசிக்கவும் சில தீர்க்கதரிசன வசனங்கள் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் – ஏசாயா 11:10-12 / எரேமியா 16:14-15

மற்றுமொரு தீர்க்கதரிசன வசனம் ஏசாயா 66:7-8ல் இடம் பெறுகிறது. 7பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 8இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ?

ஒரு பெண் பிரசவ வலியை உணர்வதற்கு முன்பு ஒரு குழந்தையைப் பெற முடியாது. ஒரு பெண் தான் பெற்றெடுக்கும் குழந்தையைப் பார்க்கும் முன் அதற்குரிய வலியை உணர வேண்டும். அதைப் போலவே எவரும் ஒரு புதிய நாடு ஒரே நாளில் பிறப்பதைக் காண முடியாது. அந்த நாடு பிரசவ வலி போன்று முதலில் வலியை அறிய வேண்டும். பிரசவ வலிக்குப் பிறகே நாடு தன் பிள்ளையாகிய புதிய நாட்டைப் பெற்றெடுக்கும். 

ஆனால் தீர்க்கதரிசனம் சொன்னது போன்றே இஸ்ரயேல் தேசம் பிறந்த பின்பே பிரசவ வேதனை ஆரம்பித்தது. 14 மே 1948 அன்று சுதந்திரம் அடைந்தது. அஃதாவது, யூத நாட்காட்டிபடி, எபிரேய மாதம் אִיָּר / Iyar / இய்யார் 5ம் நாள் – இந்த நாளை தான் Yom HaAtzmaut / யோம் ஹஆட்ஸ்மவூட் என்று இஸ்ரயேல் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு கடந்த மாதம் April 18 -19 அன்று அனுசரிக்கப்பட்டது.

15 மே1948, ஐந்து நாடுகள் (எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், சவுதி அரேபியா) இஸ்ரயேலை சுற்றி வளைத்து போர் தொடுத்தது.  இதுவே War of Independence / 1 Arab – Israeli War 1948-49 எனப்பட்டது. அடுத்து
Suez War 1956 / சூயெஸ் போர் அடுத்து
Six Day War 1967 / ஆறு நாட்கள் யுத்தம் அடுத்து
Yom Kippur War 1973 / யோம் கிப்பூர் போர் அடுத்து
Lebanese War 1982 / லெபனான் யுத்தம் அடுத்து
First Intifada – Arab Uprising 1987-1993 / முதல் இன்டிபாடா
First Gulf War of 1990 &1991 அடுத்து
Second Intifada 2000-2005 / இரண்டாம் இன்டிபாடா அடுத்து
Hezbollah war 2006 / ஹெஸ்பொல்லா போர் அடுத்து
First Gaza war with Hamas 2009 / ஹமாசுடன் முதல் காஸா யுத்தம் அடுத்து
Second Gaza war with Hamas 2012 / ஹமாசுடன் இரண்டாம் காஸா யுத்தம் அடுத்து
Third Gaza war with Hamas 2014 / ஹமாசுடன் மூன்றாம் காஸா யுத்தம்  
இப்படியாக போர்! போர்! போர்! என்றே அதன் பிரசவ வேதனை இன்று வரை தொடர்கிறது.

இந்த தொடர் வேதனை, சோதனையில் இஸ்ரயேல் தேசமானது மிக மிக அதிசயத்தக்க விதமாக  தொடர்ந்து தன்னை தற்காத்துக் கொண்டு வெற்றிகரமாக முன் சென்று கொண்டிருக்குகிறது. இதன் பொருள் பின் வரும் வசனத்தில் பொதிந்துள்ளது. சகரியா 12:6ல் – அந்நேரத்தில் நான் யூதாவிலுள்ள குடும்பத் தலைவர்களை காட்டில் எரியும் நெருப்பாக்குவேன். அவர்கள் தம் பகைவரை வைக்கோலை எரிக்கும் நெருப்பு போல அழிப்பார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பகைவர்களை எல்லாம்  அழிப்பார்கள. எருசலேம் ஜனங்கள் திரும்பவும் தம் இடமாகிய எருசலேமில் ஒய்ந்திருந்து குடியிருப்பார்கள்.

சரி இஸ்ரயேல் சந்ததி என்று ஒழியும்? என்று எதிர்பார்ப்பவர்களுக்கு, எண்ணுபவர்களுக்கு கர்த்தர் எரேமியா 31:35-37ல் பதில் சொல்லுகிறார்.  

35சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நிமயங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 36இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 37கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.