குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

Rabbi / רַבִּי / ரபி

யூத மதத்தில் Torah / תּוֹרָה / டோராவை கற்றுத் தரும் ஆசிரியரை Rabbi / רַבִּי / ரபி என்று அழைப்பர். இதன் பொருள் “என் ஆசான்” ஆகும். רב / ராவ் என்னும் சொல் “மகா பெரியவர்”, “வணங்குவதிற்குரியவர்” என்கிற பொருள்கள் தரும். இவர்கள் பொதுவாக கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் சமுதாயத்தில் நீதி நெறிமுறைகளை போதிப்பவர்களாக, ஆன்மீகத் தலைவர்களாக ஆளுகை செய்வர். ‘ரபி’ ஒரு Israel / יִשְׂרָאֵל / இஸ்ரயேல் தேசத்து சொல்.

இஸ்ரயேலில் Elders / மூப்பர்கள் நிறுவிய / வழங்கிய பழக்க வழக்கங்கள்படி Sanhedrin / யூத நீதிமன்றம் ( ஆலோசனை சங்கத்தார் – சரியான மொழி பெயர்ப்பு அல்ல! ) பேரறிவு கொண்ட ஞானிகளை “ரபி” என்று நியமனம் செய்து, அதை அவர்களது பெயர்களுக்கு முன் சேர்க்கவும் செய்து, தண்டனைக்குரிய வழக்குகளை நியாயம் தீர்க்க அதிகாரத்தையும் அளித்தனர். இது நியமனத்தால் நடந்தது.

பாபிலோனில் கல்விச்சாலையில் பயின்று “ராவ்” என்ற நியமனம் பெற்றவர்கள், அந்தப் பட்டத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நடைமுறைகள், பட்டங்கள் எல்லாம் இஸ்ரயேலிலோ அல்லது பாபிலோனிலோ முந்தைய தலைமுறைகளில் கிடையாது. இதற்கு சான்று Hillel / הלל / ஹிலல். இவர் ஒரு பாபிலோனிய நாட்டவர், ஆனால் தன் பெயருக்கு முன் பட்டம் ஏதும் கொள்ளாதவர்.

Mishna / மிஷ்னாவில் –  Rabban / ரப்பன் மற்றும் Rabbi / ரபி போன்ற சொற்கள் முதன் முதலில் வருகிறது.

Rabban Gamaliel the elder / மூப்பர் ரப்பன் கமாலியேல், Rabban Simeon / ரப்பன் சிமியோன், Rabban Johanan ben Zakkai / ரப்பன் யோஹனன் பென் ஸக்கை இவர்கள் முதல் நூற்றாண்டின் Sanhedrin / யூத நீதிமன்றத்தின் முற்பிதாக்கள் / தலைவர்கள் ஆவர். இந்தப் பதவி உடையவர்கள் தவிர்த்து யாருக்கும் இந்த ரப்பன் அடைமொழி கிடையாது. பொதுவான தர வரிசை என்னவென்றால் ராவ்வை விட பெரியது ரபி, ரபியை விட பெரியது ரப்பன், வெறும் பெயர் மட்டுமே என்றால் ரப்பனை விட பெரியது! 

எருஷலாயீம் தேவாலயங்களின் அழிவு, யூத அரசாட்சியின் முடிவு, தீர்க்கதரிசனம் மற்றும் ஆசாரியத்துவம் ஆகியவற்றின் படிப்படியான சரிவு போன்ற காலக்கட்டத்தில் யூத மக்கள் 120 பேர் கொண்ட The Men of the Great Assemblyאַנְשֵׁי כְּנֶסֶת הַגְּדוֹלָה / அன்ஷெய் கெநெசெத் ஹகெடோலா மீது தம் கவனத்தை திருப்பினர். 530 கிமு – 323 கிமு முதல் வாழ்ந்த ஆவண எழுத்தர்கள், ஆசான்கள், தீர்க்கதரிசிகள் இந்த சபையில் இடம் பெற்று இருந்தனர். ஆகாய், சகரியா, மல்கியா, எஸ்ரா, தானியேல், செருபாபேல், அனனியா, நெகேமியா, அசரியா மற்றும் மொர்தெகாய் போன்றோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு விதத்தில் இந்த மன்றத்தில் இடம் பெற்றவர்கள், இன்றைய நவீன சொற்பொருள்படி ரபிகளே! ஏனெனில் முதன் முதலில் இவர்களது ஆக்கத்தாலும், விளக்கத்தாலும் வந்ததே யூத மதத்தின் “Oral Law” / வாய்மொழிச் சட்டம். பின் நாட்களில் பெரும் புலமை பெற்ற ரபிமார்களால் இந்தச் சட்டங்கள் குறியிடப்பட்டு, தொகுக்கப்பட்டு Mishnaמִשְׁנָה / மிஷ்னா மற்றும் Talmud / תַּלְמוּד / டல்மூட்டில் இடம்பெற அங்ஙனம் உருவானதே Rabbinic Judaism / ரபிகளின் யூத மதம்.

ரபிமார்களின் காலமாக 250 கிமு முதல் 625 கிபி வரை என்று கணக்கிட்டுள்ளனர்.
இதனை ஏழு காலப்பெரும் பிரிவுகளாக வரைமுறைபடுத்தியுள்ளனர்.

1. Zugot / சுகோட்,
2. Tannaim / டன்னாயிம்,
3. Amoraim / அமோரைம்,
4. Savoraim / சவோரைம்,
5. Geonim / கவோனிம்,
6. Rishonim / ரிஷோனிம்,
7. Acharonim / அஹரோனிம்.

பண்டைய காலத்தில் ரபிகள் தாம் சார்ந்த சமூகத்தில் டல்மூட், எழுத்து மற்றும் வாய்மொழிச் சட்டங்கள், மரபுகள் முதலானவைகளை போதிப்பவர்களாக இருந்தனர். தாம் சார்ந்த குழுமத்தில் Nasi / நாசி என்கிற பட்டத்தோடு தலைவர்களாகவும், நீதிமன்றங்களில் நீதி விசாரிப்பவர்களாகவும், இல்லங்கள் தோறும் நடக்கும் பொது விழாக்களை வழிநடத்தும் சாதாரணத் தலைவர்களாகவும் இருந்து இருக்கின்றனர்.

பல்வேறு தொழில் முனைவர்களாகவும் இவர்கள் வாழ்ந்து இருக்கின்றனர். ஹிலல் மரம் வெட்டும் தொழில் செய்ததாக சான்றுகள் உள்ளன. சில மன்னராட்சியில் இவர்களது சம்பாத்தியத்திற்கு வரி விலக்கு நடைமுறையில் இருந்தது. தன் கணவரின் பணியில் பங்கேற்காதவர்களாக, இல்லச் சுமை தவிர வேறெதுவும் அறியாதவர்களாக, தம் குடும்பம் மற்றும் உறவுகள் என்கிற சிறிய வட்டாரத்திற்குள் மட்டுமே இயங்குபவர்களாக ரபியின் மனைவியர் வாழ்ந்தனர்.

ரபிகளுக்கு கொடுக்கப்பட்ட கணமானது தம் பெற்றோருக்கு தரும் கணத்தை விடத்  தாண்டியதாக இருந்தது. ஆதலால் ரபிகள் அவையுள் நுழையும் முன் அனைவரும் மரியாதை செய்யும் பொருட்டு எழுந்து நிற்பர், பின் அவரது உத்தரவு கேட்டே அமர்வர்.

ரபிகளின் வரலாற்றிலும் ஒரு மாபெரும் திருப்புமுனை நிகழ்ந்தது. ஜெர்மனி நாட்டில் எப்படி ஒரு Protestant Reformation / ப்ரோடஸ்டன்ட் சீர்திருத்தம் உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டியதோ, அதே நாட்டில் நவீன காலகட்டம் துவங்கும் சமயம்,  நிறைய மாற்றங்களும், சீரமைப்பும் கொண்டதாக யூத மதம் சீர் திருந்திய மதமாக (Reform Judaism) ஒரு புதிய திசையில் தன் பயணத்தை தொடர்ந்தது. இதன் விளைவால் ரபிகளும் மதச்சார்பற்ற, பொதுநிலை வாழ்விற்குரிய கல்வியறிவு பெற கட்டாயமாக்கப்பட்டது.

இதற்கு முந்தைய தலைமுறையினர் டல்மூட் மற்றும் அது சார்ந்த அறிவு பெற்று இருந்த போதிலும், பொதுவான கல்வி தரும் ஆதார அறிவு இல்லாதவர்களாகவே காணப்பட்டனர். அவர்கள் பேசிய மொழியும் வாழும் நாட்டின் மொழிக்கும் பெரும் இடைவெளி இருந்தது. உலக தொடர்பு என்பதே இல்லாதவர்களாக இருந்தனர். இதனாலேயே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் சபைகள் டல்மூட், மிஷ்னா தவிர பொதுக் கல்வி கற்றவர்களை மட்டுமே உபயோகப்படுத்த துவங்கினர்.

இன்று யூத இறையியல் கற்றுத் தரும் கல்விக்கூடங்கள் மூலம் ரபியாக பரிமளிக்க யூத மத கோட்பாடுகள், இலக்கியங்கள் சொல்லித் தரப்படுகிறது. முதலில் ஒரு மதச்சார்பற்ற கல்லூரியில் பட்டம் பெற்ற பின்பே இந்த நிறுவனங்களில் சேர்ந்து பயில இயலும்.

எது எப்படி இருப்பினும் யூத மதம் சொல்லும் தரமான மேம்பட்ட உயர்ந்த கல்வியும், தனி மனித ஒழுக்கமும் தவிர, போதகரையும், பாமர மக்களையும் எதுவும் வேறுபடுத்திக் காட்ட முடியாது என்கிற முக்கியமான போதனையை இவர்கள் மறக்காதவர்களாய் இருக்கின்றனர்.