“அதிகாரங்கள் உண்மையில் எங்கே பிரிகின்றன?” 

எபிரெய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து, உங்கள் ஆங்கில–தமிழ் வேதாகமங்கள் எவ்வாறு அதிகாரங்களை வேறுபடுத்திப் பிரிக்கின்றன?

அதிகாரங்கள் உண்மையில் எங்கே பிரிகின்றன?” தொடரின் முதல் பகுதி ·

ஒரு இறையியல் மாணவரிடம் லேவியராகமம் 6:1-ஐத் திறக்கச் சொல்லுங்கள், தன்வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, ஒருவர் அயலானை வஞ்சிப்பது குறித்த சட்டத்தை அவர் வாசிப்பார். எருசலேமில் ஒரு ரபியிடம் அதே வசனத்தைத் திறக்கச் சொல்லுங்கள் பலிபீடத்தின் மேல் இரவு முழுவதும் எரிந்துகொண்டிருக்க வேண்டிய தகனபலி குறித்து ஆரோனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையை அவர் வாசிப்பார்.

இருவரும் லேவியராகமத்தின் ஆறாம் அதிகாரத்தையே வாசிக்கிறார்கள். இருவரும் தவறாக மேற்கோள் காட்டவில்லை. அந்த இரு வேதாகமங்களும் அப்புத்தகத்தை ஒரே இடத்தில் பிரிப்பதில்லை.

இது வெறும் பட்டியல் ஆர்வம் அல்ல. அதிகார-வசன எல்லைகள் நாம் வாசிக்கும் விதத்தையே வடிவமைக்கின்றன. ஒரு கருத்துத் தொகுதி எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பதை அவை சுட்டுகின்றன; குறிப்பு இணைப்புகளை அவையே ஆளுகின்றன; வேத ஆசிரியர்கள் எழுதி நூற்றாண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட ஆசிரியத் தீர்மானங்களை அவை அமைதியாகச் சுமக்கின்றன. ஒரு ஆங்கில அல்லது தமிழ் வேதாகமம் எபிரெய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து எண்ணிக்கையில் வேறுபடும்போது பழைய ஏற்பாட்டின் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் அது வேறுபடுகிறது வாசகர் ஒரு யூத மூலபாடத்தின் மேல் விரிக்கப்பட்ட இடைக்கால லத்தீன் கட்டமைப்பையே பெறுகிறார்; அந்த மாற்றம் அவருக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படுவதில்லை.

ஏசாயாவின் ‘நான்காம் ஊழியக்காரன்’ அல்லது ‘பாடநுபவிக்கும் பணியாளர்’ பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். எபிரெயத்திலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் இது 52:13 முதல் 53:12 வரை ஒரே தொடர்ச்சியான பாடல். ஆயினும் அதிகாரக் கோடு அதன் உள்ளேயே, 52ஆம் அதிகாரம் முடிவதற்கு மூன்று வசனங்களுக்கு முன்பே விழுகிறது; எனவே திருச்சபை ஏசாயா 53’  என அறியும் பகுதி உண்மையில் பாடலின் நடுவிலேயே தொடங்குகிறது அதன் முதல் சொல், அதை அறிமுகப்படுத்தும் அழைப்பிலிருந்து இதோ, என் ஊழியக்காரன் ஞானமாய் நடப்பான் (52:13) துண்டிக்கப்படுகிறது. இங்கே எண்ணிக்கையில் எந்த மாறுபாடும் இல்லை; எபிரெயம், ஆங்கிலம், தமிழ் இவற்றை ஒரேமாதிரி எண்ணுகின்றன. இந்த விரிசல் முழுவதும், பதின்மூன்றாம் நூற்றாண்டு பதிப்பாசிரியர் தன் கோட்டை எங்கே வரைந்தார் என்பதை மட்டுமே சார்ந்தது முதல் பாடத்தை இது தெளிவாகக் கற்பிக்கிறது: அதிகாரம் என்பது உரையின் மேல் வைக்கப்பட்ட ஒரு சட்டகம்; உரைக்குள் உள்ள ஒரு இணைப்பு அல்ல. அந்தச் சட்டகம் தான் கொண்டிருப்பதின் வடிவத்தை எப்போதும் மதிப்பதில்லை.

ஆனால் இந்தச் சிக்கல் ஒரு விகாரமான பிரிவைவிட ஆழமானது. வேறு பல இடங்களில் சட்டகமே நகர்கிறது அதே குறிப்பு, உங்கள் வேதத்தில் விழும் இடத்தைவிட எபிரெயத்தில் வேறு சொற்களின் மேல் விழுகிறது.

இந்தக் கட்டுரை: இப்பிரிவுகள் எங்கிருந்து வந்தன, வேறுபாடுகள் எத்தனை வகைப்படும், இரு முக்கிய எடுத்துக்காட்டுகள், மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு மரபு இதை எப்படிக் கையாண்டுள்ளது என்பதை ஆராய்கிறது. ஒவ்வொரு கூற்றையும் இந்தத் தளத்திலேயே மூலபாடத்துடன் சரிபார்க்கலாம்.

1. கையெழுத்துப் பிரதிகளில் உண்மையில் என்ன உள்ளது

இன்று உலகில் உள்ள மிகப் பழமையான முழுமையான எபிரெய வேதம் லெனின்கிராட் கோடெக்ஸ் (கி.பி. 1008) Biblia Hebraica Stuttgartensia (BHS) பிப்லியா ஹெப்ரெய்கா ஸ்டுட்கார்ட்டென்சியா மற்றும் Westminister Leningrad Codex (WLC) வெஸ்ட்மினிஸ்டர் லெனின்கிராட் கோடெக்ஸ் இரண்டுக்கும் அடிப்படையான, மேலும் இந்தத் தளத்தின் ஒவ்வொரு எபிரெய அதிகாரமும் சரிபார்க்கப்பட்ட, அதே கையெழுத்துப் பிரதி. அதில் அதிகார எண்களே இல்லை.

அதற்குப் பதிலாக அதில் உள்ளது, மிகப் பழமையான யூதப் பிரிவு முறை:

பெசூகீம் פְּסוּקִים (வசனங்கள்) வசனப் பிரிவு உண்மையிலேயே தொன்மையானது. ஒவ்வொரு வசனமும் சோஃப் பாசூக் (׃) / סוֹף פָּסוּק அடையாளத்தில் முடிகிறது; மசோரட்டியர்கள் (Masoretes) ஒவ்வொரு புத்தகத்தின் வசனங்களையும் நுணுக்கமாக எண்ணி, மசோராவில் மொத்தங்களையும் நடு வசனங்களையும் பதிவு செய்தார்கள். வசனம் என்ற அலகு யூத மரபுக்குரியது; இடைக்காலத்திற்கு(Medieval Age) முந்தையது.

பெடூஹா / פְּתוּחָה, செடூமா / סְתוּמָה (திறந்த, மூடிய பத்திகள்) கையெழுத்துப் பிரதியில் உள்ள இடைவெளிகள், பெரிய பிரிவுக்குப் புதிய வரி (פ), சிறிய பிரிவுக்கு வரிக்குள் இடைவெளி (ס) எழுத்தர்களே அங்கீகரித்த கருத்துத் தொகுதிகளைக் குறிக்கின்றன. இவையே எபிரெய வேதத்தின் சொந்தப் பத்திப் பிரிவுகள்.

செடாரீம் / סְדָרִים, பராஷோத் வாசிப்புச் சுழற்சிகளுக்கான வழிபாட்டுப் பிரிவுகள்: மூன்றாண்டுச் சுழற்சியின் செடாரீம், மற்றும் இன்றும் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் ஆண்டுச் சுழற்சியின் 54 பராஷோத்.

அதிகாரங்களோ, மாறாக, இடைக்கால கிறிஸ்தவக் கண்டுபிடிப்பு. இன்று அச்சிடப்படும் எல்லா வேதாகமங்களிலும், எபிரெயம், ஆங்கிலம், தமிழ் அனைத்திலும் உள்ள அதிகார முறை, கி.பி. 1205 வாக்கில் பாரிஸ் கல்விக்கூடங்களின் வசதிக்காக Stephen Langton /ஸ்டீஃபன் லாங்டன் (பின்னாளில் Archbishop of Canterbury /கேன்டர்பரி பேராயர்) லத்தீன் வல்கேட்டின் Latin Vulgate மேல் திணித்த பிரிவுகளிலிருந்தே வந்தது. அச்சிடப்பட்ட வசன எண்கள் இன்னும் பிற்பட்டவை: ரபி ஐசக் நாதனின் ஒருங்கிணைப்பு (சுமார் 1440) லாங்டனின் அதிகாரங்களைப் பயன்படுத்தி எபிரெய வேதத்திற்கு எண்ணிட்டது; ராபர்ட் எஸ்தியேனின் 1550-களின் பதிப்புகள் மேற்கத்திய கிறிஸ்தவ உலகிற்கான எண்ணிக்கையை நிலைநிறுத்தின.

இங்கே வருகிறது முக்கியமான திருப்பம். யூத வெளியீட்டாளர்கள்  1510–20-களின் (Bomberg Rabbinic Bible)பாம்பெர்க் ரபீனிக் வேதாகமங்களில் தொடங்கி, குறிப்பு வசதிக்காக லாங்டனின் அதிகாரங்களை ஏற்றுக்கொண்டபோதும், மசோரட்டிக் வசனப் பிரிவுகளை அப்படியே காத்தார்கள் மீற அனுமதிக்க மாட்டார்கள். ஒரு எபிரெய வசனம் எங்கே முடிகிறது என்பதை லத்தீன் முறை தீர்மானிக்க அவர்கள் விடவில்லை; பல இடங்களில், லாங்டன் வைத்த இடத்திற்குப் பதிலாக மசோரட்டிக் பத்திப் பிரிவு கோரிய இடத்திலேயே அதிகாரப் பிரிவை வைத்தார்கள்.

விளைவு: அச்சிடப்பட்ட எபிரெய வேதமும் அச்சிடப்பட்ட கிறிஸ்தவ வேதமும் சற்றே வேறுபட்ட இரு கட்டங்களில் இயங்குகின்றன. அவை முரண்படும் இடங்களில், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் லத்தீன் கட்டத்தையும், எபிரெய வேதம் தன் சொந்தக் கட்டத்தையும் பின்பற்றுகின்றன.

2. வேறுபாடுகளின் மூன்று வகைகள்

இவற்றை வேறுபடுத்தி அறிவது அவசியம் ஏனெனில் இவற்றின் காரணங்கள் முற்றிலும் வேறு.

2.1 அதிகார எல்லை நகர்வுகள்

ஒரே பாடம், ஒரே வசனங்கள் ஆனால் பிரிவு வேறு இடத்தில்.

எபிரெயம் (MT) ஆங்கில / தமிழ் மரபு நகர்வின் தன்மை
ஆதி 32:1 ஆதி 31:55 எபிரெயத்தில் அதிகாரம் 32 ஒரு வசனம் முன்பே தொடங்குகிறது
லேவி 5:20–26 லேவி 6:1–7 ஆங்கில அதிகாரம் 6, எபிரெயம் 5-இல் வைத்திருக்கும் பகுதியுடன் தொடங்குகிறது
உபா 13:1 உபா 12:32 ஒரு வசன நகர்வு
1 சாமு 21:1 1 சாமு 20:42b ஒரு வசன நகர்வு
1 இராஜா 5:1–14 1 இராஜா 4:21–34 பதினான்கு வசன இடப்பெயர்வு
ஏசா 8:23 ஏசா 9:1 “புறஜாதிகளின் கலிலேயா”
எரே 8:23 எரே 9:1 “என் தலை தண்ணீராகவும்…”
எசே 21:1 எசே 20:45 ஐந்து வசன நகர்வு
தானி 3:31–33 தானி 4:1–3 நேபுகாத்நேச்சாரின் துதி
ஓசி 2:1–2 ஓசி 1:10–11 “ஜீவனுள்ள தேவனுடைய புத்திரர்”
யோவேல் 3:1–5; 4:1–21 யோவேல் 2:28–32; 3:1–21 எபிரெய யோவேலில் நான்கு அதிகாரங்கள்; ஆங்கிலத்தில் மூன்று
யோனா 2:1 யோனா 1:17 பெரிய மீன்
மீகா 4:14 மீகா 5:1 “இஸ்ரவேலின் நியாயாதிபதியை அடிப்பார்கள்”
நாகூம் 2:1 நாகூம் 1:15 “நற்செய்தி கொண்டுவருகிறவனுடைய பாதங்கள்”
சகரி 2:1–4 சகரி 1:18–21 எபிரெய சகரியா 2-இல் 17 வசனங்கள்; ஆங்கிலத்தில் 13
மல்கி 3:19–24 மல்கி 4:1–6 எபிரெய மல்கியாவில் 4ஆம் அதிகாரமே இல்லை
நெகே 3:33–38 நெகே 4:1–6 சன்பல்லாத்தின் பரிகாசம்
2 நாளா 1:18 2 நாளா 2:1 ஒரு வசன நகர்வு

இவற்றுள் சில இறையியல் ரீதியாக எடைபடக்கூடியவை. ஆங்கிலத்தில் யோவேல் 2:28-இல் விழும் பிரிவு, ஆவியின் ஊற்றுதலை பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு பிரசங்கித்த அதே பாடத்தை எபிரெயம் அதை உள்ளடக்கி வைத்திருக்கும் மனந்திரும்புதல் பகுதியிலிருந்து துண்டிக்கிறது. ஆங்கில மல்கியா 4 ஒரு வியத்தகு இறுதி அதிகாரத்தை உருவாக்குகிறது, அது எபிரேய பைபிளில் வெறுமனே அதிகாரம் 3 இன் முடிவாகும்.

2.2 தலைப்பு வசனங்கள் எண்ணப்படுதல்: சங்கீதங்கள்

எபிரெய சங்கீத நூலில் தலைப்பு வரி தாவீது தன் குமாரனாகிய அப்சலோமுக்கு விலகி ஓடிப்போனபோது பாடின சங்கீதம்” அதுவே 1ஆம் வசனம்; சில சங்கீதங்களில் 1–2 வசனங்கள். ஆங்கில மரபோ தலைப்புகளை எண்ணிடாத தலைப்புகளாக அச்சிடுகிறது.

விளைவு: ஏறத்தாழ 116 சங்கீதங்களில், ஒவ்வொரு ஆங்கில வசன எண்ணும் எபிரெயத்தை விட ஒன்று (சில நேரம் இரண்டு) பின்தங்கியுள்ளது. உங்கள் வேதாகமத்தின் சங்கீதம் 51:1 தேவனே, எனக்கு இரங்கும்” எபிரெயத்தில் சங்கீதம் 51:3. எபிரெயத்திற்கும் மொழிபெயர்ப்பிற்கும் இடையே செல்லும் ஒவ்வொரு சொல்லடைவுத் தேடலும், ஒவ்வொரு விரிவுரைக் குறிப்பும், ஒவ்வொரு பிரசங்க மேற்கோளும் இந்த இடைவெளியை சங்கீதம் சங்கீதமாகக் கணக்கிட வேண்டும்.

2.3 உண்மையான பாட விடுபாடு

சில சமயங்களில், உங்கள் வேதாகமத்தில் அச்சிடப்பட்ட ஒரு வசனம் எபிரெய கையெழுத்துப் பிரதியிலேயே இல்லை. இது எண்ணிக்கை வேறுபாட்டிலிருந்து முற்றிலும் வேறான வகை; நெகேமியா 7:68 அதற்கு முதன்மையான எடுத்துக்காட்டு.

3. நிகழ்வு ஆய்வு: லேவியராகமம் 5–6

எல்லா ஆங்கில, தமிழ் புராட்டஸ்டன்ட் வேதாகமங்களிலும் லேவியராகமம் 6:1–7 சுமப்பது ஆஷாம் அயலானுக்கு எதிரான பாவங்களுக்கான குற்றநிவாரணபலி: அடைக்கலப் பொருள், கொள்ளை, பறிமுதல், பொய்யாணை ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்வதுடன் முடிகிறது. பின்னர் 6:8 தொடங்குகிறது: கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கட்டளையிடு (צַו)…”

எபிரெய வேதம், கையெழுத்துப் பிரதியின் சொந்த அமைப்பு கோரும் இடத்திலேயே கோட்டை வரைகிறது. லேவியராகமம் 5:20–26 (MT) அயலான்-ஆஷாம் சட்டம்; அது அதிகாரம் 5-இன் குற்றநிவாரணபலித் தொடரை நிறைவு செய்கிறது. எபிரெய லேவியராகமம் 6:1 புதிய தெய்வீக வாக்குச் சூத்திரத்துடனும், புதிய பெறுநருடனும் மக்கள் அல்ல, ஆரோனும் ஆசாரியர்களும் தொடங்குகிறது.

இது தன்னிச்சையானது அல்ல. இந்த எபிரெய அதிகாரப் பிரிவு, வாராந்திர தோரா பகுதியான பராஷத் ஸாவ்-இன் தொடக்கத்துடன் ஒத்துப்போகிறது. யூத வழிபாட்டு மரபு, மசோரட்டிக் பத்திப் பிரிவு, அச்சிடப்பட்ட எபிரெய அதிகாரப் பிரிவு மூன்றும் இணைப்பு எங்கே உள்ளது என்பதில் ஒத்திருக்கின்றன. லாங்டனின் பிரிவோ விக்லிஃப்(Wycliff) முதல் எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும், அவற்றைத் தொடர்ந்து எல்லா தமிழ் வேதாகமங்களும் பின்பற்றியது ஏழு வசனங்கள் முன்னதாகவே வெட்டி, மக்களுக்கான சட்டத்தின் இறுதிப் பகுதியை ஆசாரிய கையேட்டின் தலைப்புடன் ஒட்டுகிறது.

கணக்கு:

ஆங்கிலம் / தமிழ் எபிரெயம் (MT)
லேவி 6:1–7 லேவி 5:20–26
லேவி 6:8–30 லேவி 6:1–23

MT லேவியராகமம் 5-இல் 26 வசனங்கள் (ஆங்கிலத்தில் 19). MT லேவியராகமம் 6-இல் 23 (ஆங்கிலத்தில் 30). BHS-இன் “லேவி 6:2 குறித்து” என்ற குறிப்பைப் படித்துவிட்டு ஆங்கில 6:2-ஐத் திருப்பும் மாணவர், முற்றிலும் வேறு வசனத்தையே வாசிக்கிறார்.

நீங்களே பாருங்கள்: 3ன்அட்டவணையை

4. நிகழ்வு ஆய்வு: நெகேமியா 7:68 மிகப் பழமையான பிரதியில் இல்லாத வசனம்

ஆங்கில நெகேமியா 7:68: அவர்களுடைய குதிரைகள் 736, அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245.”

லெனின்கிராட் கோடெக்ஸைத் திறவுங்கள் அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் பாடத்தை, அல்லது BHS-இன் முதன்மைப் பாடத்தை அந்த வசனம் அங்கு இல்லை. எபிரெய 68-ஆம் வசனம் ஒட்டகங்கள் (435) மற்றும் கழுதைகள் (6,720). எபிரெய அதிகாரம் 72 வசனங்கள்; ஆங்கிலத்தில் 73. ஆங்கில 7:69 முதல் அனைத்தும் எபிரெயத்தில் ஒரு வசனம் கீழே அமர்கின்றன.

என்ன நடந்தது? கிட்டத்தட்ட உறுதியாக (haplography)ஹாப்லோகிராஃபி (எழுத்தர் தவறுதலாக ஒரு வரியைத் தவிர்த்தல்): மக்கள்தொகைப் பட்டியல் வரிகள் எபிரெயத்தில் காட்சியளவில் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதால், எழுத்தரின் கண் ஒரு வரியிலிருந்து அடுத்ததற்குத் தாவி, குதிரை–கோவேறு கழுதை வரியை விட்டுவிட்டது. இதை உறுதியாகச் சொல்ல முடிகிறது, ஏனெனில் நெகேமியா 7 என்பது எஸ்றா 2-இன் இரட்டைப் பதிவு அதே லெனின்கிராட் கோடெக்ஸில் உள்ள எஸ்றா 2:66-இல் அந்த வசனம் உள்ளது. நெகேமியாவின் பல மசோரட்டிக் கையெழுத்துப் பிரதிகளிலும் அது உள்ளது; அதனால்தான் BHS அதை விமர்சனக் குறிப்பில் பதிவு செய்கிறது, KJV முதல் ஆங்கில மரபு அதை அச்சிடுகிறது.

ஆங்கிலம் / தமிழ் எபிரெயம் (MT)
நெகே 7:1–67 நெகே 7:1–67
நெகே 7:68 (குதிரைகள், கோவேறு கழுதைகள்) லெனின்கிராட் கோடெக்ஸில் இல்லை
நெகே 7:69–73 நெகே 7:68–72

இதன் பாடம் இரண்டு. முதலாவது: அச்சிடப்பட்ட எபிரெய வேதம் ஒரே கையெழுத்துப் பிரதியின் நேரடிப் பதிப்பு அது லெனின்கிராட் கோடெக்ஸை, விடுபாடு உட்பட, உண்மையாக மறுபதிப்பு செய்து, திருத்தங்களை விமர்சனக் குறிப்புகளுக்குள்ளேயே வைக்கிறது. உங்கள் ஆங்கில வேதாகமமோ தொகுக்கப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு அது விடுபாட்டை பரந்த கையெழுத்துப் பிரதி மரபிலிருந்து சரிசெய்கிறது; ஆனால் அப்படிச் செய்ததை உங்களிடம் சொல்வதில்லை.

இரண்டாவது: வசன எண் வேறுபாடு என்பது ஒரு அறிகுறி; அதற்கு நோய் நிர்ணயம் தேவை. லேவியராகமம் 6-ம் நெகேமியா 7-ம் மேலோட்டமாக ஒரே மாதிரி தோன்றுகின்றன “எண்கள் பொருந்தவில்லை” ஆனால் ஒன்று ஆசிரிய எல்லை வேறுபாடு; மற்றொன்று உண்மையான பாட விமர்சன நிகழ்வு. எது எது என்பதை விமர்சனக் குறிப்பு மட்டுமே சொல்லும்; மொழிபெயர்ப்பு ஒருபோதும் சொல்லாது.

நீங்களே பாருங்கள்: 4ன் அட்டவணையை

5. தமிழ்ச் சூழல்

தமிழ் வேதாகம மரபு ஆசியாவின் மிகப் பழமையானவற்றுள் ஒன்று சீகன்பால்குவின் 1714 புதிய ஏற்பாடு, பெரும்பாலான ஐரோப்பிய மிஷனரி மொழிபெயர்ப்புகளுக்கும் முந்தையது. ஆயினும் இந்தக் கேள்வியில் அது ஏறத்தாழ முழுவதுமாக ஆங்கிலத் தீர்மானங்களின் செயலற்ற பெறுநராகவே இருந்துள்ளது.

பழைய மொழிபெயர்ப்பு (TOV) KJV வழித்தோன்றலில் நேரடியாக நிற்கிறது; அதன் அதிகார-வசனக் கட்டம் ஆங்கிலக் கட்டமே, முழுமையாகப் பெறப்பட்டது. TOV வாசிக்கும் தமிழர் லேவியராகமம் 6:1–7-ஐ அயலான்-ஆஷாம் சட்டமாகவும், நான்கு அதிகாரங்கள் கொண்ட மல்கியாவாகவும், எண்ணிடாத தலைப்புகளுடன் சங்கீதங்களையும், 73 வசனங்கள் கொண்ட நெகேமியா 7-ஐயும் வாசிக்கிறார் ஒவ்வொரு லத்தீன் மரபுத் தீர்மானமும் தமிழில் மறுபதிப்பாகி, எபிரெயம் வேறுபடுகிறது என்று வாசகருக்கு அறிவிக்கும் ஒரு ஓரக்குறிப்பு கூட எங்கும் இல்லாமல். இந்த வசன எண்ணமைப்பு தேர்ந்தெடுக்கப்படவில்லை; உள்வாங்கப்பட்டது ஏனெனில் மூலங்கள் பார்க்கப்பட்ட இடங்களிலும் மொழிபெயர்ப்பு ஆங்கில வேதாகமத்துடன் உரையாடியே செய்யப்பட்டது.

திருவிவிலியம் (TVV) இந்திய வேதாகமச் சங்கமும் TNBCLC-ம் இணைந்து உருவாக்கிய பொது மொழிபெயர்ப்பு வேறொரு திருச்சபை நீரோட்டத்தைச் சேர்ந்தது; இரண்டாம் நியமநூல்களைச் சுமக்கிறது; தனக்கே உரிய தமிழ்ப் புத்தகப் பெயர்களையும் கொண்டது (லேவியராகமம் அங்கு ‘லேவியர்’, மல்கியா ‘மலாக்கி’). அதன் எண்ணிக்கை எபிரெயத்தை நோக்கிச் சாயும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இல்லை. எபிரெயமும் ஆங்கிலக் கட்டமும் பிரியும் அதே இடங்களில் சரிபார்த்தால், திருவிவிலியம் தெளிவாக ஆங்கிலக் கட்டத்திலேயே நிற்கிறது: லேவியர் 6, குருவின் எரிபலியுடன் அல்ல, அயலான்-ஆஷாம் சட்டத்துடன் (6:1–7) தொடங்குகிறது; மல்கியா நான்கு அதிகாரங்கள், யோவேல் மூன்று; சங்கீதம் 51இல் தலைப்பு வரி எண்ணிடப்படாத தலைப்பே, எனவே கடவுளே, எனக்கு இரங்கும் 3-ஆம் வசனம் அல்ல, 1-ஆம் வசனம். வசன எண்ணிக்கையில் திருவிவிலியம் பழைய மொழிபெயர்ப்பின் இரட்டையே.

விளைவு, முரண்படும் இரு தமிழ்க் கட்டங்கள் அல்ல ஒரே கட்டம், அனைவராலும் பெறப்பட்டது. சீர்திருத்தப் பழைய மொழிபெயர்ப்பு முதல் கத்தோலிக்க-பொது திருவிவிலியம் வரை, சபைப் பிரிவுகள் அனைத்தையும் கடந்து, தமிழ் வாசிக்கும் சபை தன் வேதத்தை லாங்டனின் லத்தீன் கட்டத்தாலேயே எண்ணுகிறது; அதன் முதன்மைப் பதிப்புகள் எதுவும் எபிரெயம் உண்மையில் எங்கே பிரிகிறது என்பதை வாசகருக்குக் காட்டுவதில்லை. முக்கியமான வேறுபாடு இரு தமிழ் வேதாகமங்களுக்கு இடையே அல்ல; அவை இரண்டும் தாம் வழிவந்த கையெழுத்துப் பிரதிகளிலிருந்து வேறுபடுவதே இதனால்தான் அது கவனிக்கப்படாமலே போகிறது.

இதுவே ஆய்வு முறை பற்றிய ஆழமான கருத்து. இந்திய இறையியல் கல்லூரிகளுக்கு BHS கிடைக்கவில்லை என்பது பிரச்சினை அல்ல. ஆங்கில வேதாகமத்தையே நடைமுறை மூலமாகக் கருதும் பழக்கமே பிரச்சினை அதனால் எபிரெய அதிகாரம் எங்கே பிரிகிறது?”, இந்த வசனம் கையெழுத்துப் பிரதியில் உள்ளதா?” என்ற கேள்விகள் எழுவதே இல்லை. ஒரே ஒரு அதிகாரத்தையாவது லெனின்கிராட் கோடெக்ஸ் நகலுடன், பெடூஹா–செடூமா கண்ணுக்குத் தெரிய, வாசிக்கக் கோரும் ஒரு பாடத்திட்டம் ஒரே ஒரு பிற்பகலில் இந்த அனுமானத்தை உடைத்துவிடும்.

6. நேர்மையான கையாளுகை எப்படி இருக்கும்

மொழிபெயர்ப்பாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் திருமறைத் தளங்களை உருவாக்குபவர்களுக்கும் இந்த வேறுபாடுகள் மௌனத்தை அல்ல, வெளிப்படையான வடிவமைப்பைக் கோருகின்றன:

  1. முழுமையான இணைப்பு அட்டவணை மசோரட்டிக் மற்றும் மொழிபெயர்ப்பு வசன எண்ணமைப்புகளுக்கிடையே, பாதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திற்கும்; தற்காலிகத் திருத்தமாக அல்ல, நியமத் தரவாக.
  2. இரட்டை எண்ணிக்கைக் காட்சி கட்டங்கள் வேறுபடும் இடங்களில். 6:1 [5:20 MT] என்ற முறைக்குச் செலவே இல்லை; தொடர்ந்து கற்பிக்கிறது.
  3. வகைப்பாட்டு நேர்மை எல்லை நகர்வுகள், தலைப்பு வசன இடைவெளிகள், உண்மையான பாட விடுபாடுகள் வெவ்வேறாகக் குறிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை வெவ்வேறு.
  4. சொந்தப் பிரிவுகளைக் கற்பித்தல் சோஃப் பாசுக், பெடூஹா–செடூமா, செடாரீம், பராஷோத் ஆகியவை முதலாம் ஆண்டு பழைய ஏற்பாட்டு அறிமுகத்தில் இடம்பெற வேண்டும் லாங்டனின் அதிகாரங்கள் குறிப்பிடப்படுவதற்கு முன்பே.

முடிவுரை

உலகின் ஒவ்வொரு வேதாகமத்திலும் உள்ள ஒவ்வொரு அதிகார எண்ணும், மூலபாடம் எழுதப்பட்டு நூற்றாண்டுகளுக்குப் பின் செய்யப்பட்ட ஒரு விளக்கச் செயலே. பழைய ஏற்பாட்டில், ஆங்கில மற்றும் தமிழ் வேதாகமங்களில் அச்சிடப்பட்டுள்ள அந்த விளக்கம், எபிரெய கையெழுத்துப் பிரதிகள் சுமக்கும் விளக்கம் அல்ல பல இடங்களில்.

மசோரட்டியர்கள் திருமறையின் ஒவ்வொரு வசனத்தையும் எண்ணி, ஒன்று கூட இழக்கப்படாதிருக்கப் பதிவு செய்தார்கள். மொழிபெயர்ப்பில் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் செய்யக்கூடிய குறைந்தபட்சம், இணைப்புகள் உண்மையில் எங்கே உள்ளன என்பதை வாசகருக்குச் சொல்வதே. திருமறையை ஏறத்தாழ முழுவதும் மொழிபெயர்ப்புகளின் மொழிபெயர்ப்புகள் வழியாகவே பெறும் இந்திய சபைக்கு, இந்த அறிவை மீட்பது கல்விப் பெருமை அல்ல. சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துக் கையாளுவதன் ஒரு பகுதியே அதன் அதிகார எல்லைகள் வரையிலும், அதன் வசனங்களின் எண்ணிக்கை வரையிலும்.